ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய மனு மீதான விசாரணையின் போது நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்துள்ள கருத்தால் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ர்டாங்கின் உடலை கட்சி அலுவலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது இன்று காலை 8.30 மணி அளவில் நீதிபதி பவானி சுப்பராயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வாதாடிய ஆம்ஸ்ட்ராங் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு, “ ஆம்ஸ்ட்ராங்குக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யவே அனுமதி கோரியுள்ளோம். கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய, அருகில் வசிப்பவர்கள் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.” என்று வாதாடினார்.
அதற்கு நீதிபதி, “ அடக்கம் செய்யப்பட உள்ள பகுதி குடியிருப்பு பகுதியா?..”
ஆம்ஸ்ர்டாங்க் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு ," ஆமாம்" என பதிலளித்தார்.
அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், ”16 அடி சாலை அருகில் இந்த நிலம் அமைந்துள்ளது. ஏராளமான வீடுகள் அமைந்துள்ளன. வீட்டில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் ஒரு இடம் தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு அடக்கம் செய்து கொள்ளலாம். கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதி குடியிருப்பு பகுதி, குறுகலான சாலை பகுதி. இதுப்போன்ற காரணங்களால்தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. “
ஆம்ஸ்ர்டாங்க் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு ,”தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.?”
அரசு தரப்பு, “ தேமுதிக அலுவலகம் 27000 சதுர அடி கொண்ட பரந்த இடம். பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம், மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடம். அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டது.”
இதனை கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன்.
"ஆர்ம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு என் இரங்கலை தெரிவிக்கிறேன். நீதிமன்றத்தில் பல முறை அவரை பார்த்துள்ளேன். ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. வேறு பெரிய சாலை, பெரிய விசாலமான இடம் இருந்தால் கேட்டு சொல்லுங்கள். அதன் பிறகு வேண்டுமானால் உத்தரவு பிறப்பிக்கிறேன். தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம்.
தற்போதைக்கு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படக் கூடாது. இந்த யோசனை குறித்து மனுதாரரிடம் கேட்டு சொல்லுங்கள் உத்தரவு பிறப்பிக்கிறேன். நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். வேறு நல்ல இடத்தை கூறுங்கள். ” எனக் கூறினார்.
இந்நிலையில், 12 மணிக்கு பதிலளிக்கிறோம் என ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி தரப்பு நீதிபதியிடம் முறையீடு செய்துள்ள சூழலில், 'எங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எங்கள் தரப்பை கேட்க வேண்டும்." என்ற குற்றச்சாடினை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த நீதிபதி, 'உங்கள் தரப்பை கேட்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றால் அதற்கு நேரம் எடுக்கும்." என்று கூறி, வழக்கை 10.30 மணிக்கு தள்ளிவைத்தார்.