பல்லடம் அருகே தொழிலாளர்கள் கட்டிய கொடியை, பாகிஸ்தான் கொடி என நினைத்து காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரடிவாவி அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள கதிர்வேல் தோட்டம் என்றப் பகுதியில் தனியார் பனியன் நிறுவனத்தில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் சில இஸ்லாமிய இளைஞர்களும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை அவர்கள் வசிக்கும் அறையின் மேல்பகுதி மற்றும் தென்னை மரங்களில் பச்சை மற்றும் காவி நிறங்களில் பிறைநிலா மற்றும் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட கொடிகள் பறந்து கொண்டிருந்தன.
அதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பாகிஸ்தான் கொடி பறப்பதாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த கொடிகள் உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கரடிவாவி ஊராட்சி தலைவர் ரஞ்சிதா பகவதிக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து ஊராட்சித் தலைவர் அங்கு சென்று பார்த்த பொழுது கொடி இருந்தது. இதுதொடர்பாக ஊராட்சித் தலைவர், காமநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், அங்கிருந்த வடமாநில இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அங்கு தங்கியுள்ள இஸ்லாமிய இளைஞர்கள் அடுத்தவாரம் கொண்டாடப்பட உள்ள பண்டிக்கைக்காக நேர்த்தி கடன் செலுத்துவதற்காக கட்டியுள்ளதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் கொடிகளை அகற்ற கூறியதை அடுத்து அவர்கள் அதனை அகற்றினர். வட மாநில இளைஞர்கள் கட்டியக் கொடியை பாகிஸ்தான் கொடி என நினைத்து பொதுமக்கள் அங்கு கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.