இரட்டை இலை சின்னம் முடக்கமா? இபிஎஸ் மனுவுக்கு காட்டமாக பதிலளித்த தேர்தல் ஆணையம், ஓபிஎஸ்!

இரட்டை இலை சின்னம் முடக்கமா? இபிஎஸ் மனுவுக்கு காட்டமாக பதிலளித்த தேர்தல் ஆணையம், ஓபிஎஸ்!
இரட்டை இலை சின்னம் முடக்கமா? இபிஎஸ் மனுவுக்கு காட்டமாக பதிலளித்த தேர்தல் ஆணையம், ஓபிஎஸ்!
Published on

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என, தமது கையெழுத்தை அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி பழனிசாமி தொடர்ந்த இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், இரட்டை இலைச்சின்னம் முடக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில், உச்சநீதிமன்றத்தில் “ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என நான் கையொப்பம் இட்டு அனுப்பும் வேட்பாளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. இது தொடர்பாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” எனக்கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீது மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க ஓபிஎஸ் தரப்பு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இந்த மனு மீதான வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. ஆகவே அதையொட்டி ஓபிஎஸ் தரப்பு மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பின் பதில் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இன்று காலையிலேயே பதில் மனு அளித்த ஓபிஎஸ், அதில் “ஒருங்கிணைப்பாளர் -  இணை ஒருங்கிணைப்பாளர் காலாவதியாகிவிட்டது என்பதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு மூலம் மட்டுமே ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்தாகிவிட்டனவா என்பது முடிவாகும். அப்படி இருக்கையில் இடைக்காலமாக உரிமை கோரி எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மனுவை விசாரிக்கவே கூடாது. இந்த வழக்கில் ஏதாவது உத்தரவிடப்பட்டால், அது நிலுவையில் இருக்கும் வழக்கின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் எந்தவொரு முந்தைய வழக்கிலும் தேர்தல் ஆணையம் ஒரு பிரதியாக இல்லாத நிலையில், தற்போது எவ்வாறு அதனை ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என கோர முடியும்? இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் உரிய சட்ட வழிமுறைபடிதான் நடக்க வேண்டும் என்பதை அறிந்தே, தலைமை தேர்தல் ஆணையம் எடப்பாடி தரப்பு கொடுத்த கோரிக்கைகளை ஏற்காமல் வைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மனுமீது பதிலளித்த தேர்தல் ஆணையம், “இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார். ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ எங்கள் வேலை இல்லை. கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் எப்போதும் தலையிடுவதில்லை. வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, தேர்தலை கண்காணிப்பது ஆகியவை மட்டுமே ஒரு தேர்தல் ஆணையத்தின் வேலையாகும்” என்று காட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், “கையெழுத்திட அதிகாரமுள்ளவர் என தேர்தல் ஆணைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டவரின் கையெழுத்துள்ள வேட்புமனுவையே தேர்தல் ஆணையத்தால் ஏற்க முடியும். ஏற்கனவே இதுகுறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால், கடந்தாண்டு ஜூலை 11ஆம்தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட விதிமாற்றங்களை கருத்தில் கொள்ளவில்லை” என்றும் பதில் மனுவில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இவ்விரு கருத்துகளால், இரட்டை இலை சின்னம் முடக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com