குரூப்-2 மற்றும் 2-ஏ பதவிகளுக்கான காலி இடங்கள் குறித்த அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.
அதன்படி, குரூப்-2 பதவிகளில் 507 பணியிடங்கள், 2-ஏ பதவிகளில் 1820 இடங்கள் என மொத்தம் 2,327 பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 20-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 7,90,376 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களுக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வர்களும் அதற்கு தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தன்னுடைய ஆண்டு அட்டவணையில் குரூப்-2, 2-ஏ தேர்வு தேதி மாற்றப்பட்டும், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதும், தேர்வர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ். சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிசை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, “தேர்வு தேதி எதுவும் மாற்றப்படவில்லை என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியானதன் அடிப்படையில், செப்டம்பர் 14 ஆம் தேதி தேர்வு நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். இதனை, டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும் உறுதிபடுத்தியுள்ளது.