1971 ல் 107 தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டுதான் நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அதற்கு பிறகு இந்த அரசு நிறுவனங்கள் பொது இன்சூரன்ஸ் பரவலை சிற்றூர்கள், கிராமங்கள் வரை எடுத்துச் சென்றுள்ளன. தனியார் நிறுவனங்களின் அலுவலக அமைவிடங்கள் எல்லாம் அவர்கள் வணிகத்தில் அனுமதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆன பிறகும் மெட்ரோ நகரங்கள் அல்லது இரண்டாம் தட்டு நிறுவனங்களை மையமாக கொண்டு அமைந்துள்ளன என்ற இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (I.R.D.A) 2020 ஆண்டறிக்கை கூட சொல்வது நிதி அமைச்சருக்கு தெரியாத ஒன்றல்ல.
ரூ 12 பிரிமியத்திற்கு ரூ 2 லட்சம் காப்பீடு வழங்குகிற, வங்கி கணக்குகளோடு இணைக்கப்பட்ட 'பிரதான் மந்திரி சுரக்ச பீம யோசனா' திட்டத்தை அமலாக்கி வருவது நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தானே! லாபமா... மக்கள் நலனா என்றால் தனியார்கள் எதை தெரிவு செய்வார்கள்? அரசு நிறுவனங்கள் எதை தெரிவு செய்யும் என்பதற்கு உதாரணங்கள் உள்ளன ஏராளம்.
நான்கு அரசு நிறுவனங்கள் தனியார் வசம் போக கூடாது. நான்கு நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து ஆயுள் காப்பீட்டில் எல். ஐ. சி இருப்பது போல ஒரே அரசு பொதுக் காப்பீடு நிறுவனமாக உருவாக்கி வலுப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு இதைப் பரிசீலிக்க வேண்டும்.
ஒன்றிய அரசே... அரசின் நிதித் தேவைகளை ஈடு செய்ய எவ்வளவோ வழிகள் உள்ளன. அவற்றை செய்ய அரசியல் உறுதி இல்லாமல் அரசு நிறுவனங்கள் மீது கை வைக்காதே!
இவ்வளவு காலம் பங்கு விற்பனைதான்; அரசு நிறுவனங்களாகவே தொடரும் என்று பேசி வந்த அரசாங்கத்தின் உண்மை நோக்கம் இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
அரசின் கைகளில் 51 % பங்குகள் இருக்கும் வரை ஓ. பி. சி, பட்டியல் சாதி, பழங்குடி இட ஒதுக்கீடுகள் தொடரும். ஆனால் தனியார் மயம் என்றால் சமூக நீதியும் சேர்ந்து பலியாகும். இட ஒதுக்கீடு இருக்காது.