வள்ளிமலை அரசு பள்ளி மைதானத்தில் கொட்டப்பட்டுள்ள மணல் பொது ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகை அரசிடம் ஒப்படைக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குவியல் குவியலாக பல டன் மணல் சட்டவிரோதமாக கொட்டப்பட்டுள்ளதாகவும், மணல் விற்பனை செய்வதற்காக பள்ளி மைதானத்தை மணல் கொட்டும் இடமாக மாற்றியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து மேல்பாடி வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரில், பள்ளியில் கொண்டப்பட்டுள்ள மணலை பொது ஏலம் விடக் கோரி காட்பாடி வட்டாட்சியருக்கு மனு அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது வள்ளிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கொட்டப்பட்டுள்ள பல டன் மணல் பொது ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அரசு கணக்கில் செலுத்துமாறு காட்பாடி வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் மணல் கொட்டியதற்கான காரணம் குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திமுகவைச் சேர்ந்த காட்பாடி ஒன்றிய குழு பெருந்தலைவர் வேல்முருகன் என்பவர் சட்டவிரோதமாக மணல் விற்பனை செய்ய அரசு பள்ளி மைதானத்தை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்தி வேல்முருகனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டபோது...
வள்ளிமலை அரசு மேல்நிலைப் பள்ளி மைதானம் முந்தைய ஆட்சி காலத்தில் மொரம்பு கொட்டியதால் அது கடினமாக மாறியுள்ளது. இதனால் விளையாடும் மாணவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. இதனால் நான் 2 முதலிதவி பெட்டிகளை வாங்கிக் கொடுத்துள்ளேன். மேலும் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதற்கு இனங்க மைதானத்தை சீர்படுத்தவே மணலை கொட்டியிருப்பதாகவும் கூறினார். மேலும் தன்மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.