பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என புகார்தாரர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள பாஜக பிரமுகர் கல்யாணராமன், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு நான்கு வாரத்திற்குள் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புகார்தாரர் கோபிநாத் சார்பில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஏற்கெனவே மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசமாட்டேன் என்று உத்தரவாத மனுத் தாக்கல் செய்துவிட்டு, மீண்டும் அதேபோல பேசுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்ற உத்தரவை மதிக்காத அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.