இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க, இரண்டு அணிகளுக்கும் ஜூன் 16ம் தேதி வரை அவசகாசம் தந்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக உடைந்தது. இந்நிலையில் ஆர்கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இரு அணிகளும் தாங்களே உண்மையான அதிமுக என கூறி இரட்டை இலைச் சின்னத்துக்குப் போட்டி போட்டன. இதனால் அந்தச் சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. கட்சியின் பெயரையும், கொடியையும் இரு அணியினரும் பயன்படுத்த தடை விதித்தது.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளும் இரட்டை இலைச்சின்னத்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே 40 லட்சம் பேருக்கு மேல் தங்களுக்கு ஆதரவு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி தெரிவித்திருந்தது. இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய 8 வார காலம் அவகாசம் வேண்டும் என சசிகலா தரப்பு, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இதற்கிடையே, கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய, இரண்டு அணிகளுக்கும் ஜூன் 16-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் அவகாசம் கொடுத்துள்ளது.