செய்தியாளர்: மணிகண்டபிரபு
போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரங்களில் தமிழகத்தின் பெயர் பெரியளவில் அடிப்பட்ட நிலையில், சில தினங்களில் மதுரையில் 180 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டைமைன் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை - செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. கடந்த ஒன்றாம் தேதி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த தகவலின் அடிப்படையில், பிள்ளமன் பிரகாஷ் என்பவரை தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது மதுரையில் இறங்கிய அவரை மடக்கிபிடித்த அதிகாரிகள், அவரிடம் 30 கிலோ மெத்தபெட்டைமைன் என்ற போதைப்பொருள் இருப்பது கண்டறிந்தனர். அதனை பறிமுதல் செய்ததோடு அவரையும் கைது செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள தனது வீட்டில் 6 கிலோ போதைப்பொருள் இருப்பதாக பிரகாஷ் கூறிய நிலையில், அதனையும் அவரது வீட்டின் அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிரகாஷ் மனைவி மோனிஷாவையும் கைது செய்து மதுரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்களிடம் போதைப்பொருளை ஒப்படைத்தால் 25 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும் என பிரகாஷ் தெரிவித்துள்ளார். மது அரங்கு கூடத்தில் கிடைத்த நட்பின் மூலம் இந்தப் பணி கிடைத்தாகவும், இதில் தொடர்புடைய வேறு யாரையும் தனக்குத் தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரகாஷ் கூறுவது போல் வெறும் டெலிவெரி நபராக அவர் இருக்க வாய்ப்பில்லை என்று கருதும் அதிகாரிகள், முன்பின் தெரியாத நபரிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொடுத்தனுப்ப மாட்டார்கள் என திட்டவட்டமாக கூறுகின்றனர். எனவே, பிரகாஷின் நெருங்கிய நண்பர்கள், அவரது தொலைப்பேசி அழைப்புகள், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவை குறித்த தகவல்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
இதன் மூலம் இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம், அவர்கள் மூலம் பல தகவல்கள் கிடைக்கும் என்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் எண்ணுகின்றனர்.
இதற்கிடையே, உள்துறை அமைச்சகத்தின் போதைப்பொருள் கட்டுப்பட்டுத் துறை இந்த வழக்கின் விசாரணயில் இணையும் என தகவல் வெளியாகியுள்ளது.