சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 46 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஹவாலா பணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இன்று காலை பினாகினி விரைவு ரயில் வந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து வந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவரது பையில் 46 லட்சம் பணம் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அவரை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப்படை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் அவர் வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரவி(56) என்பதும், இவர் நகை வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும் வேலூரில் உள்ள நாராயணன் என்பவரின் நகைக்கடைக்கு ரவி நகை விற்பனை செய்துள்ளார். அந்த நகைக்குண்டான 46 லட்சம் பணத்தை விஜயவாடாவிற்கு சென்று வாங்கி வருவதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆனால் பணத்திற்குண்டான உரிய ஆவணம் ரவியிடம் இல்லாததால் போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 46 லட்ச ரூபாய் ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருவதாகவும், வருமான வரித்துறையிடம் பணத்தை ஒப்படைக்க உள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் - சுப்பிரமணியன்