விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைப்பதற்கு அனுமதி பெற ஒற்றைச் சாளர முறையை சென்னை காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
விநாயகர் சிலை வைப்பவர்கள் கடந்த ஆண்டு வரை காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இதனை எளிமையாக்கும் விதமாக ஒற்றைச் சாளர முறையை சென்னை பெருநகர காவல்துறையினர் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இந்த முறை மூலம் விநாயகர் சிலை நிறுவுபவர்கள், நிறுவும் அமைப்புகள் தனித்தனியே ஒவ்வொரு துறையிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு காவல் மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரியை சந்தித்து மனுக்களை கொடுத்தால் போதுமானது. குறிப்பிட்ட காவல் அதிகாரி அனைத்து துறைகளில் இருந்தும் அனுமதி பெற்று சிலை நிறுவ அனுமதி வழங்குவார் என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மயிலாப்பூர், தியாகராய நகர், அம்பத்தூர் உள்ளிட்ட 12 காவல் மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விநாயகர் சிலை வைக்க விரும்புவோர் வரும் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.