ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் மொத்தம் 8 நடைமேடைகள் உள்ளன. இதில் அனைத்து நடைமேடைகளிலும் பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு நடைமேடை எண் 5ல், அரக்கோணம் அரசு ஐடிஐ சீருடையில் 2 மாணவர்கள் தண்டவாளத்தில் குதித்து புரண்டு கொண்டிருந்தனர்.
இதுதொடர்பான வீடியோவில், ஒரு மாணவன் போதையில் தண்டவாளத்தில் விழ, இன்னொரு மாணவன் அவரை தாங்கிப் பிடிக்கிறார். அப்போது அந்த மாணவனும் போதையில் கீழே விழுகிறார். நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் நடைமேடை எண் 5ல் எந்த ரயில்களும் வரவில்லை.
இந்த சம்பவங்களை அங்கிருந்த சக மாணவர்கள் மற்றும் ரயில் பயணிகள், ரயில்வே ஊழியர்கள் பார்த்து திகைத்து நின்றனர். பின்னர் அரக்கோணம் ரயில்வே போலீசார் அங்கு வந்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. அவர்கள் அரக்கோணம் ஐடிஐ-ல் படிக்கும் மாணவர்கள்தானா அல்லது சென்னையை சேர்ந்த மாணவர்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும், இந்த சம்பவம் குறித்து பேசிய ரயில்வே காவல்துறை ஆய்வாளர் விஜயலட்சுமி, மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஆலோசனை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.