Exclusive | Zoho சார்பில் உருவாகும் புதிய 'Operating System' - விவரிக்கிறார் ஸ்ரீதர் வேம்பு!
“Zoho நிறுவனம் உருவாக்கி வரும் கணினி மென்பொருள் (Operating System) பற்றி?”
“இந்தியா ஒரு வல்லரசாக வேண்டுமென்றால் எல்லாவிதமான தொழில்நுட்பத்தையும் நாமே மேற்கொள்ள வேண்டும். அறிவுசார் ஆராய்ச்சிதான் இந்தியாவிற்கு தேவை. அறிவாற்றல் தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். அந்த வகையில் ZOHO நிறுவனமும் பலவிதமான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அதில் ஒரு பகுதிதான் ஆப்ரேட்டிங் சிஸ்டம். நமது நாட்டின் தேவைக்காகவும் நமது மக்களின் தேவைக்காகவும் சோகோ நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கணினி மென்பொருளை உருவாக்கி வருகிறார்கள்.
இதன் மூலம் ஆதார் போன்ற நமது நாட்டில் பாதுகாக்க வேண்டிய குடிமக்களின் ஆவணங்களை நாமே சேகரித்துக் கொள்ளலாம். விமான ரயில் டிக்கெட் விலை முன்பதிவு செய்வதற்கான தளம், மற்றும் ஒரு கணினி இயங்குவதற்கு தேவையான அனைத்து விதமான செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாக நாங்கள் உருவாக்கி வரும் கணினி மென்பொருள் இருக்கும்”
“தமிழ்நாட்டில் பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் ஒருவர் கூட சேராத நிலை உள்ளது. பொறியியல் தரம் குறைந்துள்ளதா?”
“தமிழ்நாட்டில் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைந்து வருகிறது. கல்லூரிகளில் மாணவர்கள் சேராததற்கு இதுவும் ஒரு காரணம்.
கல்வித்துறையில் மட்டும் பிரச்னை என கூற முடியாது. கல்விக் கட்டணம் அதிகம் என்பதால் பொறியியல் நோக்கி செல்பவர்களுடைய ஆர்வம் குறைகிறது. மாணவர்கள் தொழில்துறைக்கு ஏற்றார் போல செயல்படும் பயிற்சிகளை மேற்கொள்வது முக்கியம். பட்டயம் வாங்கித் தருவது மட்டுமின்றி வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போதுதான் தொழில்நுட்பக் கல்விகளை நோக்கி மாணவர்கள் வருவார்கள்”
“ஜி 20 மாநாட்டில் இந்தியா வருங்காலத்தில் பல நாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்கப்போகிறது எனக் கூறியுள்ளார்கள்?”
“அனைத்து தொழில்நுட்பங்களும் பாரத தேசத்தில் இருக்க வேண்டும். அறிவாற்றல் திறன் மேம்பாடு அதிகரிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான தொழில்நுட்பங்களை ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் மட்டும் போதாது தொழில்நுட்பங்களை உருவாக்குபவர்களையும் உருவாக்க வேண்டும்.
உலகில் ஐந்து நிறுவனங்கள் மட்டுமே 500 பில்லியன் டாலருக்கு மேல் லாபம் சம்பாதிக்கிறார்கள். நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இந்த நிறுவனங்கள் மூன்று மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.
ஸ்ரீதர் வேம்பு
தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தியாவில் மட்டும் தான் ஒரு வருடத்தில் 2 கோடி குழந்தைகள் பிறக்கிறார்கள். இதை பயன்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்க வேண்டும்”
“செயற்கை நுண்ணறிவு படிப்பின் ஆர்வம் அதிகரித்து வருவது பற்றி...?”
“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வைத்து தொழிற்சாலையின் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. வருங்காலத்தை முடிவு செய்ய போகும் செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆர்வம் அனைவர் மத்தியில் அதிகரித்து வருகிறது. மத்திய அரசும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்தான வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுத்து வருகிறது”
“தொழில்நுட்ப வளர்ச்சியால், நாட்டின் மரபு சார்ந்த தொழில்களின் ஆர்வம் குறைந்து வருகிறதா?”
“தொழில்நுட்பங்கள் கிராமங்களை நோக்கி சென்றாக வேண்டும். நமது விவசாயம் போன்ற தொழில்களில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
எவ்வளவு கிலோ நெல் விற்று நம்மால் ஐபோன் வாங்க முடியும் என்கிற மதிப்பை ஆராய்ந்து பார்க்க வேண்டும். விவசாயம் மட்டுமே செய்து நம்மால் முன்னேற முடியாது. தொழில்நுட்பங்கள் படித்து அதை விவசாயம் போன்ற மரபு சார்ந்த தொழில்களில் ஈடுபடுத்த வேண்டும்”
“சோகோ நிறுவனத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கான செயல்பாடுகள் குறித்து ?”
“கலைவாணி எனப்படும் தொடக்கப் பள்ளியை தொடங்கியுள்ளோம். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கிராமங்களை தேர்ந்தெடுத்து அதில் உள்ள மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வருகிறோம். அதில் தமிழ் வழியில் படித்த அரசு பள்ளி மாணவர்கள் அதிகமாக வருகிறார்கள். மேலும் பல கிராமங்களில் சோகோ தொடக்கப்பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி மையங்கள் தொடங்க உள்ளோம்”