“மருத்துவராவதே என் கனவு” பொறியியல் தரவரிசை பட்டியலில் இடஒதுக்கீட்டின் கீழ் முதலிடம் பிடித்த மாணவி!
பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், தருமபுரி அரசுப்பள்ளி மாணவி மகாலட்சுமி முதலிடம் பெற்றுள்ளார்.
தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி 200 மதிப்பெண்களைப் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார். தருமபுரி அரசு மாதிரி பள்ளியில் கல்வி பயின்று சென்னையில் பயிற்சி பெற்றுள்ள இவர், 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 579 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.
இதையொட்டி மாணவி மகாலட்சுமிக்கு அவரின் பெற்றோர் சீனிவாசன் மற்றும் உறவினர்கள் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சிகளை பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில் மாணவி மகாலட்சுமி, மருத்துவம் படிப்பதை தனது கனவாக வைத்து படித்து வந்ததாக தெரிவித்துள்ளார். தற்பொழுது மருத்துவ கலந்தாய்வுக்காக காத்திருக்கிறாராம்.
இதுபற்றி அவர் நம்மிடையே பேசுகையில், “நல்ல மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை நல்ல மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால், அரசு இட ஒதுக்கீட்டின்படி பொறியியல் படிப்பில் சிறந்த துறையை தேர்ந்தெடுத்து பொறியில் படிப்பேன்” என தெரிவித்துள்ளார். மேலும் தனது படிப்பிற்கு உதவிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார்.