தமிழகத்தில் முதல் முறையாக அடுத்தாண்டு நடைபெறவுள்ள பன்னாட்டு ஜவுளி கண்காட்சியின் குறும்படம், கையேடு, சின்னம் மற்றும் இணையத்தளம் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில், பன்னாட்டு ஜவுளி கண்காட்சியின் முன்னோட்ட விழா நடைப்பெற்றது. இதில், அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளித்துறை அமைப்புகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
முன்னோட்ட விழாவில் பேசிய கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த்,“இந்தியாவில் தமிழகம் தான் ஜவுளித்துறையின் தலைமையாக இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள புதிய திட்டங்கள், புதிய கண்டுபிடிப்புகள் அவசியமாவதால் இதுபோன்ற கண்காட்சி மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்று தெரிவித்தார். மேலும் நவீன தொழில்நுட்பம், உபகரணங்கள், பன்னாட்டு சந்தை வாய்ப்பு ஆகியவற்றை அறிந்துக்கொள்ள இந்த கண்காட்சி மிகவும் உதவும் என்றார் அவர்.
இதனைதொடர்ந்து பேசிய டெக்ஸ்புரோசில் (பருத்தி ஊக்குவிப்பு கழகம்) தலைவர் உஜ்வல் லஹோட்டி, நாட்டின் 50% நூற்பாலைகளை தமிழகம் கொண்டுள்ள நிலையில், இந்த கண்காட்சியில் 200 இந்திய ஜவுளித்துறை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்கின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட வாங்குபவர்கள் இந்த கண்காட்சியை அணுகுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். பின்னர் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஜவுளித்துறையில் உற்பத்தியாகிற அனைத்து பொருட்களும் விற்பனையாக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் இந்தியாவில் முதல் முறையாக ஒரு மாநில அரசு பன்னாட்டு ஜவுளி கண்காட்சியை 2 கோடி ரூபாய் மதிப்பில் நடத்தவுள்ளதாக கூறினார்.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் ஒவ்வொரு கூட்டத்திலும் ஜவுளித்துறையின் கோரிக்கை எடுத்துரைக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் ஜவுளித்துறையின் திறனை பன்னாட்டு அளவிற்கு காண்பிக்கும் போது தமிழகத்தின் ஜவுளித்துறையின் வர்த்தகம் மேம்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுனார். நாட்டிலேயே தமிழகம் தான் அதிகளவில் ஜி.எஸ்.டி.கவுன்சிலில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.