சட்டப்பேரவையின் 110 விதியின் அறிவிப்புகள் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
“வளர்ச்சி மிகு தமிழ்நாடாகவும், அமைதி மிகு தமிழ்நாடாகவும் இருப்பதால், உலகெங்கிலும் இருந்து, தமிழ்நாட்டை நோக்கி தொழில் செய்ய வந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த தொழில் நிறுவனங்கள் மூலமாக தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சி அடைகிறது. மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் இளைய சக்தியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
2022 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி தரக்குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல்ப்பொருட்கள், மின்னணுப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
புத்துயிர் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில், 2020 ஆம் ஆண்டு கடைசி நிலையில் இருந்த தமிழ்நாடு, தற்போது சிறந்த செயல்பாட்டாளர் அந்தஸ்த்தை பெற்று முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக திகழந்துவரும் தமிழ்நாட்டை, 2030 ஆம் ஆண்டிற்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்கு தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
மின்னனு மற்றும் மின் வாகனங்களின் உற்பத்தி துறையில், ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலிடத்தை அதிகளவில் ஈர்த்துவருகிறது. ஓசூர் நகரை தமிழ்நாட்டின் முக்கிய பொருளாதார நகரமாக மாற்ற பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக பெரிய திட்டம் உருவாக்கப்பட்டு தற்போது அவை முடிவடையும் தருவாயில் உள்ளன.
ஒசூர் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியமாக இந்த அரசு கருதுகிறது. இதற்காக, ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.
ஏற்கெனவே, சென்னை கோட்டூர்புரத்தில் 8 மாடிகளை கொண்ட ஒரே நேரத்தில் 1200 பேர் உட்கார்ந்து படிக்கும் வகையில், நூலகத்தை உருவாக்கி அதற்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பெயர் சூட்டியுள்ளார் தலைவர் கலைஞர்.
இதேபோல. தமிழ்நாட்டின் பிறப்பகுதிகளில் நூலகங்களின் மூலம் பயன்பெறும் வகையில், மதுரையில் 15.7.2023 கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்னால் அமைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கோவையிலும் மாபெரும் நூலகம், அறிவியல் மையம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்று இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
இந்த வரிசையில் அடுத்ததாக திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அது அமைந்திடும்” என்றார்.