”3 ஆண்டிற்கு முன்பே பயங்கரவாத வழக்கில் கைது”..மங்களூர் ஆட்டோ வெடிப்பில் சிக்கிய நபர் யார்?
மங்களூர் ஆட்டோ வெடிப்பு சம்பவம் குறித்தும் அதில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் குறித்தும் முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கங்கநாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரோடி பகுதியில் உள்ள உள்வட்ட சாலையில், நேற்று (நவ.,19) மாலை சென்று கொண்டிருந்த ஆட்டோவில் பயணியின் பையிலிருந்த பார்சல் ஒன்று திடீரென வெடித்து சிதறி அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது.
இதில் ஆட்டோ ஓட்டுநரும், ஆட்டோவில் சென்ற பயணியும் படுகாயமடைந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தி வந்தனர். அதன்படி, விபத்துக்குள்ளான ஆட்டோவில் இருந்து குக்கரும் பேட்டரிகளும் கைப்பற்றப்பட்டதால், வெடிமருந்து இருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் பேரில் சந்தேகித்து காவல்துறை தீவிர விசாரணையை முடுக்கிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், மங்களூருவில் நடந்த சம்பவம், பயங்கரவாத தாக்குதலுக்கானதுதான் என கர்நாடக மாநில DGP பிரவீன் சூட் ட்விட்டரில் பதிவிட்டு தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், “கடுமையான சேதம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கர்நாடக மாநில காவல்துறையும், மத்திய அரசு தரப்பிலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன” எனக் கூறியுள்ளார் பிரவீன் சூட்.
ஆட்டோ வெடிப்பில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஓட்டுநரும் பயணியும் குணமானதும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, மத்திய புலனாய்வுக் குழுக்கள் கர்நாடக போலீசுக்கு உதவுவதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கர்நாடக டிஜிபி நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில், “அந்த ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்த பயணிதான் நேரடியாக இந்த பயங்கரவாத செயலை செய்திருக்க வேண்டும் என்று முழுமையாக சந்தேகிக்கிறோம். போலியான ஆதார் ஆட்டையும் பயணித்த அவர் குக்கரில் வெடிமருந்துகளை கொண்டு வந்து வெடிக்க வைத்திருக்க வேண்டும். அவரது நோக்கம் முழுமையாக தெரியவில்லை. இது திட்டமிட்ட சதி என்றே நாங்கள் சந்தேகிக்கிறோம். குற்றவாளியும் பயணியுமான அந்த நபர் 45 சதவிதம் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரால் பேசமுடியவில்லை. அவர் குணமடைந்தது விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
தற்போது ஆட்டோ வெடிப்பு சம்பவத்தில் குற்றம் இழைத்தவராக சந்தேகிக்கப்படும் இந்த நபர், கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவின் சிவமோகாவில் நடைபெற்ற வீர் சவர்கர் - திப்பு சுல்தான் போஸ்டர் சர்ச்சையில் சிக்கியிருந்தார். அத்துடன், இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு பயங்கரவாத செயல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்ததாக உளவுத்துறை தரப்பில் தெரிவித்ததாக நியூஸ் 18 தம்முடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தமிழக போலீசார் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களை சோதனை செய்து அனுப்பி வருகின்றனர். கர்நாடக மாநிலம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் கார்கள், டெம்போ வாகனங்கள், லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.