புதுக்கோட்டையில் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து Diggi Price என்ற ஆன்லைன் ஷாப்பிங்கில், 1500 ரூபாய் மதிப்பிலுள்ள வாட்ச் ஆர்டர் செய்த நபருக்கு, எதற்குமே பயன்படாத வாட்ச்சின் வார் மட்டுமே வந்ததால் இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட காந்தி நகர் 6-ம் வீதியை சேர்ந்தவர் தீபக் ராஜ். இவரது தங்கை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, Diggi Price என்ற ஆன்லைன் ஷாப்பிங்கில், 1500 ரூபாய் மதிப்பிலுள்ள வாட்ச்சை தீபக் ராஜ் பெயரில் ஆடர் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டி.டி.டி.சி. (DTDC) கொரியர் மூலம் வாட்ச் வந்துள்ளது. இதனையடுத்து கொரியர் கொடுப்பவர் தீபக் ராஜிடம் வாட்ச்சுக்கான ஆயிரத்து 500 ரூபாயை பெற்றுக்கொண்டு, ஓ.டி.பி. எண்ணைப் பெற்று வாட்ச் டெலிவரி கொடுத்ததற்கான குறுந்தகவலையும் பெற்று விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து தீபக் ராஜ் வாட்ச் வந்த பார்சலை பிரித்து பார்க்கும்பொழுது, அதில் வாட்ச் மாதிரியான வாட்ச்சின் கூடு அதாவது நடுவில் டயல் எதுவும் இல்லாமல் வெறும் வார் மட்டுமே இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபக் ராஜ், உடனடியாக சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனத்திற்கு சென்று கொரியரில் வந்த வாட்சை காண்பித்து கேட்டுள்ளார். இதற்கு கொரியர் நடத்தும் நிர்வாகத்தினர் நாங்கள் பொருட்கள் வந்தால், அதை டெலிவரி மட்டுமே செய்வோம், எங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை, நீங்கள் ஆர்டர் செய்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தீபக் ராஜ், தனது தங்கை ஆர்டர் செய்த டெல்லியை முகவரியாக கொண்டு செயல்படும் Diggi Price என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, அந்த நிறுவனத்தின் எண் சுவிட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தீபக் ராஜ் என்ன செய்வதென்றே தெரியாமல் பார்சலில் வந்த எதற்குமே பயன்படாத அந்த வாட்சின் கூட்டை எடுத்துக்கொண்டு, வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.