"வருகிற 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், கருணாநிதி மரணம் குறித்து விசாரணை நடத்தி அதற்குரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம். ஸ்டாலின் மீது விசாரணை வரும். அதற்கு மு.க.அழகிரிதான் சாட்சி சொல்வார்" என ராஜன்செல்லப்பா எம்எல்ஏ பேட்டியளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை ராஜன்செல்லப்பா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளரிகளிடம் பேசும்போது...
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கண்டுபிடிக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு, "அம்மாவின் மரணம் குறித்து அவர் எது கூறினாலும் நாங்கள் தைரியமாகத் தான் உள்ளோம். மு.க.அழகிரி தெளிவாக வெளிப்படையாக கூறியுள்ளார். கடந்த தேர்தலின்போது கருணாநிதியின் உடல் நிலை சரியில்லாததால் தேர்தலில் நிறுத்த வேண்டாம் என்று சொன்னேன். அதனை மீறி கருணாநிதியை தேர்தலில் நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்று கூறி ஸ்டாலின் தன் சுயலாபத்திற்காக நிறுத்தியுள்ளார். கருணாநிதி மரணத்திற்கு ஸ்டாலின்தான் காரணம் என நேரடியாக கூறியுள்ளார்.
வருகிற 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் கருணாநிதி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம். ஸ்டாலின் மீது விசாரணை வரும். அதற்கு மு.க.அழகிரி தான் சாட்சி சொல்ல வருவார்.”என்றார்.
மு.க.அழகிரி இருந்தபோது மதுரை திமுக கோட்டையாக இருந்தது என்று மு.க.அழகிரி கூறியது குறித்த கேள்விக்கு, “ திமுகவின் வெற்றி எல்லாம் கோட்டையாக மாறாது. திமுக வெற்றி அடைந்துள்ளது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் மதுரை அதிமுகவின் கோட்டை. திமுக உடைந்து விட்டது. திமுகவில் சீட்டு கிடைக்காதவர்கள் எல்லாம் ஒவ்வொருவரும் அழகிரி பக்கம் வரப்போகிறார்கள்” எனத் தெரிவித்தார்.