இருளர் சமூக பெண்ணுக்கு அநீதி: ராமதாஸ் குற்றச்சாட்டு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, பழங்குடியின பெண் ஊராட்சி மன்ற தலைவரை ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் பணிசெய்யவிடாமல் தடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இருளர் இன பெண்
இருளர் இன பெண்புதியதலைமுறை
Published on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, பழங்குடியின பெண் ஊராட்சி மன்ற தலைவரை ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் பணிசெய்யவிடாமல் தடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஆனாங்கூர் ஊராட்சியில் பழங்குடியின இருளர் சமூகத்தை சேர்ந்த 30 குடும்பங்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சங்கீதா என்ற பழங்குடியின பெண் வெற்றிபெற்று, ஊராட்சி மன்ற தலைவரானார். ஆறு வார்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஊராட்சியில் சித்ரா என்பவர் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாவை, துணைத் தலைவர் சித்ரா மற்றும் அவரது கணவர் குணசேகர் ஆகியோர் தொடர்ந்து பணிசெய்யவிடாமல் இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் முன்னிலையில் பட்டியலினத்தவரான தன்னை அவமரியாதையாகவும் தரக்குறைவாகவும் பேசி அசிங்கப்படுத்தியதாக புகார் தெரிவித்துள்ள பெண் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா, இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா குணசேகரிடம் கேட்டபோது, ஊராட்சி மன்ற தலைவர்
முன்வைத்துள்ள குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை என்றும், அவரை முன்னிலைப்படுத்தியே அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே இருளர் சமூக ஊராட்சி மன்ற பெண் தலைவரை அவரது இருக்கையில் அமரவிடாமல் திமுகவினர் அநீதி இழைத்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஊராட்சி மன்ற இருக்கையில் அமர வைக்கும் இயக்கத்தை நடத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆனாங்கூர் ஊராட்சியில் சாதிபாகுபாடு எதுவும் இல்லை என்றும், இது தற்பொழுது அளிக்கப்பட்டுள்ளது தனிப்பட்ட புகார் என்றும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சி. பழனி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com