திருக்குருங்குடி அருகேயுள்ள மகிழடி கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் அர்ஜூன். இவர், தனது உறவினரை சந்திக்க இருசக்கர வாகனத்தில் வள்ளியூர் சென்றுள்ளார். அப்போது வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே முன்னால் சென்ற கார் மீது இளைஞர் அர்ஜூன் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில், நிலைதடுமாறி சாலையில் விழுந்த அர்ஜுன் கை, கால்களில் ரத்த காயங்களுடன் கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வந்தடைந்த நிலையில், முதலுதவி சிகிச்சைக்காக இளைஞரை அதில் ஏற்ற முயன்றுள்ளனர். ஆனால், காயமடைந்த இளைஞர் மதுபோதையில் இருந்ததால் ஆம்புலன்ஸில் ஏற மறுத்ததுடன், நான் ஒன்றும் இறந்துவிடவில்லையே எனக்கூறி அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், இளைஞரை ஆம்புலன்ஸில் ஏற்ற முயன்றனர். ஆனால், ஆம்புலன்ஸில் ஏற மறுத்து இளைஞர் பிடிவாதம் செய்தார். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் இளைஞரை குண்டுக் கட்டாக தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றிய காவல் துறையினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.