கோவையில் காயம்பட்ட யானை வெளியே சுற்றி வருவதால், மஞ்சள் பவுடர் அல்லது மிளகாய் சாறை வீட்டில் உள்ள அரிசி, மாவில் கலந்து வைக்க வனத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கோவையிலிருந்து கடந்த 15 ஆம் தேதி கேரளா சென்ற 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை மீண்டும் 27ஆம் தேதி கோவை வனப்பகுதிக்கு வந்தது. வாயில் காயம்பட்ட நிலையில் உணவு உட்கொள்ள முடியாமல் இருந்த மக்னா யானைக்கு கடந்த 29ஆம் தேதி முதல் அரிசி மாவு, சத்து மாவு, சோள மாவு ஆகிய உணவில் மாத்திரைகள், குளுக்கோஸ் ஆகிய மருந்துகள் கலந்து சிகிச்சை அளித்து வருவதுடன், கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
நாக்கு பகுதி சிதறி, மேல் தாடைப் பகுதியில் பலத்த காயம் அடைந்த மக்னா யானை, சின்ன தடாகம் பகுதியில் உள்ள விளை நிலங்களையும், குடிசை வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. அதனால், வனப்பகுதியை ஒட்டி வாழும் மக்கள், வீடுகளில் அரிசி, மாவை இருப்பு வைத்தலை தவிர்ப்பதுடன், வீடுகளில் மின்விளக்குகளை எரிய விடுவதுடன், வண்ண விளக்குகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது மட்டுமன்றி மதியம் 12 மணிக்கு மேல் சமைப்பதையும், இரவு நேரங்களில் வெளியே உறங்குவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் மஞ்சள் பவுடர் அல்லது மிளகாய் சாரை வீட்டில் உள்ள அரிசி, மாவில் கலந்து வைக்க வேண்டும் எனவும் வனத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.