மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ,திருவள்ளூர் தனி தொகுதி குறித்த ஓர் அலசலை பார்க்கலாம்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் முதலாவது தொகுதி திருவள்ளூர். தமிழகத்தின் வடக்கு முனையில் அமைந்துள்ள திருவள்ளூர் தொகுதி 2008ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின்போது உருவானது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த திருவள்ளூர் 2008ஆம் ஆண்டு தனி மக்களவை தொகுதியாக உருவானது. திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், ஆவடி, பூந்தமல்லி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை இம்மக்களவை தொகுதி உள்ளடக்கியுள்ளது.
இதில் பொன்னேரி மட்டும் காங்கிரஸ் வசம் உள்ள நிலையில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, மாதவரம், ஆவடி, பூந்தமல்லி ஆகிய 5 தொகுதிகளும் திமுக வசம் உள்ளன. 2009ஆம் ஆண்டு திருவள்ளூர் தொகுதிக்கு நடந்த முதல் தேர்தலில் அதிமுகவின் பி.வேணுகோபால் வெற்றி பெற்றார். 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அதிமுக சார்பில் வேணுகோபால் போட்டியிட்டு அவரே வெற்றிபெற்றார்.
2019ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட ஜெயக்குமார் வெற்றிபெற்றார். அந்த தேர்தலில் ஜெயக்குமார் 7.67 லட்சம் வாக்குகளை பெற்றார்.
தொடர்ச்சியாக 3ஆவது முறையாக போட்டியிட்ட அதிமுகவின் வேணுகோபால் 4.10 லட்சம் வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். மக்கள் நீதி மய்யத்தின் லோகரங்கன் 73 ஆயிரம் வாக்குகளும் நாம் தமிழர் கட்சியின் வெற்றிசெல்வி 65 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.