'செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்' - சபாநாயகராக பொறுப்பேற்கும் அப்பாவு கடந்து வந்த பாதை

'செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்' - சபாநாயகராக பொறுப்பேற்கும் அப்பாவு கடந்து வந்த பாதை
'செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்' - சபாநாயகராக பொறுப்பேற்கும் அப்பாவு கடந்து வந்த பாதை
Published on

சபாநாயகர் தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அப்பாவுவின் அரசியல் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. அவர் கடந்துவந்த பாதையை தெரிந்துகொள்வோம்.

ஆரம்ப கால அரசியல் வாழ்கை 

69 வயது நிரம்பிய அப்பாவுவின் ஆரம்ப கால அரசியல் காங்கிரஸ் கட்சியில் தொடங்கியது. 1996 இல் ஜி.கே. மூப்பனார், தமிழ்மாநில காங்கிரஸை தொடங்கியபோது அதில் இணைந்தார். அதே ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆக தேர்வானார். அவரது முதல் தேர்தல் வெற்றி இது.

2001இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அப்பாவு அதே தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், தமாகா - அதிமுக கூட்டணியில் இருந்த வேறு கட்சிக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டதால், கொந்தளித்த அவர், சுயேச்சையாகப் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார்.

செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்

அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக அவர் தன்னை வளர்த்துக் கொண்டிருந்தார். விவசாயிகள் பிரச்னை, தாமிரபரணி
ஆற்றில் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்தது என பல்வேறு மக்கள் பிரச்னைகளில் குரல்
கொடுத்தவர், அப்பாவு ஆவார். இதுபோன்ற சூழலில், தமாகா மீண்டும் காங்கிரஸில் இணைந்தபோதிலும், அப்பாவு அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

திமுகவில் இணைந்த அப்பாவு

இருப்பினும், தனது தொகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட அதிமுக முக்கியப் பிரமுகர்கள் சிலரை அப்பாவு
தீவிரமாக எதிர்த்ததால், அந்தக் கட்சியின் தலைமையுடன் அவருக்கு பிரச்னை ஏற்பட்டது.இதன் தொடர்ச்சியாக வழக்குகள் பாய்ந்ததால்,
அதிருப்தி அடைந்த அப்பாவு, 2006ஆம் ஆண்டு, திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்தித்து அக்கட்சியில் தம்மை இணைத்துக்
கொண்டார். அப்போது அதே வருடம் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் களம் கண்டு வெற்றியும் பெற்றார் .

அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு அப்பாவு மீண்டும் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டார். பரபரப்பான வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர்
அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் முறைகேடு
நடந்திருப்பதாகக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

அதில், ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால், தற்போது வரை முடிவுகள் வெளியிடப்படாமலேயே உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதே ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com