கொடைரோட்டில் தான் படித்த அரசுப் பள்ளிக் கட்டடத்தை ரூ.5 லட்சம் செலவில் புனரமைத்து கொடுத்த அமெரிக்க வாழ் தமிழருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1975-ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவரான சர்தார் தற்போது அமெரிக்காவில் சிறந்த தொழிலதிபராக விளங்கி வருகிறார்.
இந்நிலையில் சர்தார் தான் படித்த அரசுப் பள்ளியில் உள்ள பழமையான கட்டடத்தை ரூ.5 லட்சம் செலவில் புரனமைத்துக் கொடுத்ததோடு பள்ளிக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மேஜை நாற்காலிகளை வாங்கி கொடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
இவை அனைத்தையும் பள்ளிக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான ஓய்வு பெற்ற நீதியரசர் கருப்பையா பங்கேற்று நிலக்கோட்டை வட்டார அளவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.
பின்னர், மாணவர்களிடம் உரையாற்றிய அவர், தனி மனித ஒழுக்கமே ஒரு மனிதனின் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் என்று பேசினார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.