வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழக கடலோரத்தை நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கன முதல் மிக கனமழையும், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. நாளை கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கன முதல் அதி கனமழையும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கன முதல் மிக கனமழையும் பொழியும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.