இந்திய விமானப்படையில் தமிழக இளைஞர்களை சேர்ப்பதற்கான முகாம் நடைபெறவுள்ளது.
தமிழர்களை தேர்வு செய்யும் வகையில் இந்திய விமானப்படை சார்பில் நெல்லையில் ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. விமானப்படையில் குறைந்தளவே தமிழர்கள் பணிபுரிவதால், அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது. டிசம்பர் 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பூர், வேலூர், காஞ்சிபுரம், கரூர், விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.
இதைத்தொடர்ந்து சேலம், தேனி, நெல்லை, திருச்சி, விருதுநகர், கன்னியாகுமரி, தருமபுரி, கடலூர், அரியலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்கும் இளைஞர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அத்துடன் 14/7/1998 மற்றும் 26/6/2002 ஆகிய காலகட்டத்திற்கு இடைப்பட்ட தேதியில் பிறந்த நபராக இருப்பது அவசியம். முகாமிற்கு வரும் மாணவர்கள் தங்களின் மாற்றுச்சான்றிதழ் மற்றும் படிப்பு சான்றிதழ்களுடன் வருகை தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.