மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள் தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் !

மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள் தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் !
மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள் தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் !
Published on

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலியை போக்க திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சாலைகள் பெண்களுக்கு மாத்திரை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. 

பருவம் எய்திய பெண்கள் ஒவ்வொரு மாதமும் இயற்கையாக மாதவிடாய் பிரச்னையை எதிர்கொள்வது வழக்கம். இந்த சமயங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலியால் அவர்கள் மிகவும் அவதிப்படுவார்கள். அத்துடன் தங்களின் பணிகளை செய்வதில் சற்று சிரமமும் சிக்கலும் ஏற்படும். இதனை எதிர்கொள்வதற்கு அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையுடன் சில மாத்திரைகள் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின்றி சட்டவிரோதமாக தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் வலிக்கு மாத்திரை உட்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பாக தாம்ஸ்ன் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தமிழ்நாட்டில் நடத்திய கள ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ராய்ட்ர்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ஆடைகள் தொழிற்சாலையில் பணிபுரியும் 100 பெண்களிடம் ஆய்வு நடத்தியது. இதில் தமிழ்நாட்டில் ஆடை தொழிற்சாலையில் பெண்கள் சந்தித்துவரும் அவலநிலை மற்றும் அங்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த மாத்திரைகள் குறித்து தெரியவந்துள்ளது. 

இந்தத் தொழிற்சாலைகள் பெண் பணியாளர்களின் வேலையை கவனிக்க ஒரு மேற்பார்வையாளர் அமைக்கப்பட்டுள்ளார். அவர் பெண்களின் பணி நேரம், விடுப்பு, உடல்நிலை ஆகியவை குறித்து கண்காணித்து வந்துள்ளார். இந்த தொழிற்சாலைகளில் பணியின் போது பெண்களுக்கு மாதவிடாய் கால வலி ஏற்பட்டால் அவர்களுக்கு மருத்துவர்களின் அறிவுரைகள் இல்லாமல் மாத்திரை கொடுத்துவந்துள்ளனர். அத்துடன் பெண்கள் இந்த மாத்திரையை தங்களின் மேற்பார்வையாளரின் முன்னிலையில் சாப்பிடவும் வற்புறுத்தப்பட்டுள்ளனர். 

இந்த மாத்திரை குறித்து பெண்களிடம் கேட்டப்போது, “அவர்கள் அந்த மாத்திரையில் பெயர் எதுவும் இருக்காது. ஒரு கலர் மாத்திரை. அவ்வளவு தான் எங்களுக்கு தெரியும். இதை சாப்பிட்டால் எங்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வழி நின்றுவிடும். இதனை எங்களுக்கு தொழிற்சாலையில் உள்ள மேற்பார்வையாளர் தருவார்” என்று தெரிவித்தனர்.

இந்த மாத்திரையை தாம்ஸ்ன் ராய்ட்ர்ஸ் நிறுவனம் அப்பெண்களிடம் பெற்று மருத்துவர்களிடம் அளித்து ஆராய்ந்தது. இதனை ஆராய்ந்த மருத்துவர்கள், “இந்த மாத்திரைகள் வலியை போக்க கூடிய மாத்திரைகள். மேலும் இந்த மாத்திரையை அதிகம் பயன்படுத்தினால் பின்விளைவுகள் ஏற்படும். குறிப்பாக பெண்களின் கர்ப பையில் கட்டிகள் ஏற்படும்” என்று தெரிவித்தனர். 

மேலும் இந்தத் தொழிற்சாலைகள் பெண்களுக்கு நிலவிவரும் அவல நிலையும் தெரியவந்துள்ளது. இந்த ஆடை தொழிற்சாலைகளில் பெண்களுக்கு சரியான வசதிகள் இல்லை. பெரும்பாலான தொழிற்சாலைகளில் பெண்களுக்கான கழிவறைகள் சரியான முறையில் இல்லை. அத்துடன் ஒரு சில இடங்களில் பெண்கள் பத்து மணி நேரம் பணி செய்து வருகின்ற நிலையும் தெரியவந்துள்ளது. 

இந்திய தொழிற்சாலைகள் சட்டத்தின்படி பணியாளர்களுக்கு மருத்துவம் சார்ந்த சாதனங்களை தொழிற்சாலைகள் மருத்துவர்களின் அனுமதியின்றி அளிக்கக் கூடாது. ஆனால் இந்தத் தொழிற்சாலைகள் இந்தச் சட்டத்தை மீறி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தாம்ஸ்ன் ராய்ட்ர்ஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் தெரிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. 

இந்த ஆடை தொழிற்சாலைகளில் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்களே அதிகம் பணிப்புரிகின்றனர். அவர்களுக்கு சட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வும் புரிதலும் இல்லாததாலும், அவர்களின் குடும்பத்தில் நிலவி வரும் வறுமையினாலும் சில தொழிற்சாலைகள் அவர்களை பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டால் இப்பெண்களின் நிலை மாறும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. அத்துடன் மக்களுக்கு சட்டங்கள் மற்றும் மருத்துவரின் வழிகாட்டுதல் இல்லாமல் மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு செய்யவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com