ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 20 பெண் அதிகாரிகளுக்கு சென்னை பரங்கிமலையிலுள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்திய ராணுவ பயிற்சி முறைகளை மேற்கொள்வதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை இந்தியா வந்தனர். அவர்களுக்கு வரும் 24ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்று அவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டது. தங்கள் நாட்டில் பெண் அதிகாரிகள் களத்தில் இறங்கி பணிபுரிவதற்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்றும் இந்தியாவில் அதிநவீன பயிற்சி வழங்கப்படுவதாகவும் ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து பெண் ராணுவ அதிகாரிகளுக்கு அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும் என சென்னை ராணுவ பயிற்சி மையத்தின் கேப்டன் சம்ரிதி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்திருக்கும் 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு உடற்பயிற்சி, டிரில் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் ஆங்கிலத்தில் பேசுவது உள்ளிட்ட பயிற்சிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படும். மேலும் இந்திய ராணுவத்தினரின் ஆயுதங்களைக் கையாள்வது குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் நாட்டில் கற்றுத்தரப்பட்ட பயிற்சிகள் பற்றி நாங்கள் தெரிந்து கொள்வதும், அவர்களுக்கு நம்முடைய ராணுவ பயிற்சிகள் குறித்து கற்றும் தரப்படுகிறது என தெரிவித்தார்.