சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்ட ஏ.என்-32 ரக விமானம் 29 பேருடன் விபத்துக்குள்ளாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-32 ரக சரக்கு விமானம், கடந்த ஆண்டு ஜூலை 22-ம் தேதி அந்தமானுக்கு 29 பேருடன் புறப்பட்டது. புறப்பட்ட 15 நிமிடத்தில் மாயமானது.
கடலில் விழுந்து விமானம் மூழ்கி இருக்கலாம் என்று 6 விமானங்கள், 4 கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. நீர்மூழ்கி கப்பல் மூலம் கடலுக்கு அடியில் தேடும் பணியும் நடந்தது. மொரீஷியஸ் நாட்டில் இருந்து வந்த கப்பல் ஒன்றும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. தொடர்ந்து 2 மாதங்களாகத் தேடும் பணி நடந்தும் எவ்வித தடயமும் கிடைக்காததால் விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் இறந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த விமானம் மாயமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது பற்றி இன்னும் முழுமையான தகவல் ஏதும் இல்லை என்றும் அது மர்மமாகவே இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.