தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் என்று தொண்டர்களால் அழைக்கப்படும் ராகுல் காந்தி தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பலதரப்பட்ட மக்களை சந்தித்தார்.
இந்நிலையில் புதிய தலைமுறையின் 'தலைவர்களுடன் ஒருநாள்' நிகழ்ச்சியில் ராகுல் காந்தியுடன் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நடத்திய கலந்துரையாடலின் ஒரு பகுதி...
இந்த பயணத்தின்போது மக்களிடம் உங்களுக்கு வரவேற்பு எப்படி உள்ளது?
"தமிழகம் வருவது எனக்கு எப்போதும் பிடிக்கும். அது ஒரு நேர்மறையான உணர்வு."
2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் உங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டதாக எண்ணுகிறீர்களா?
"ஆம், நிச்சயமாக மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். ஆனால் இங்கு வருவது எனக்கு உணர்வுப்பூர்வமானது. நான் அதிகப்படியான அன்பையும் அரவணைப்பையும் உணர்கிறேன். தமிழக மக்களிடம் எனக்கு பிடித்த சில விஷயங்கள் உள்ளன. எனவே இங்கு வர பிடிக்கும்."
மதுரை உள்ளிட்ட இடங்களில் பேசும்போது தமிழ் பண்பாட்டை பாராட்டியுள்ளீர்கள் இதற்கு முன் நீங்கள் தமிழ், கலாசாரத்தை போற்றியதில்லை என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறதே?
"நான் பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில்லை. அவர்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. எனக்கு தமிழக மக்களுடன் ஒரு உறவு உள்ளது. எனவே நான் அவர்களுடன் பேசுகிறேன். இந்தியாவைப் பொருத்தவரை தமிழகம் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் முக்கிய பங்காற்ற முடியும் என நம்புகிறேன். தேசிய அளவில் இந்தியா என்கிற கோட்பாட்டின் முக்கிய அங்கம் நீங்கள்தான். தமிழகத்தில் இருந்து நானும் மற்றவர்களும் ஏராளமானவற்றைக் கற்றுக்கொள்ள முடியும்."
தமிழகம் எப்போதும் மாநில சுயாட்சிக்கு குரல்கொடுத்து வருகிறது கூடுதல் அதிகாரம் அளிக்கப்படவேண்டும் என கருதுகிறீர்களா?
"உங்களுடன் நான் பேசிக் கொண்டிருந்தால் நான் உங்களை மதிக்க வேண்டும். நீங்களும் என்னை மதிக்க வேண்டும். நான் உங்களிடம் அவமரியாதையாக நடந்துகொண்டு, நீங்கள் என்னிடம் மரியாதையாக நடக்கவேண்டும் என நான் எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஆர்எஸ்எஸ், பாஜக சித்தாந்தத்தில் அவர்கள் தமிழை மதிப்பதில்லை. தமிழ் மொழியையும், தமிழ் வரலாற்றையும், அதன் பண்பாட்டையும் அவர்கள் மதிப்பதில்லை."
பாஜக தமிழை மதிக்கவில்லை என நினைக்கிறீர்களா? பிரதமர் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிவருகிறாரே?
"யாரையோ மேற்கோள்காட்டி பேசிவருவதால் நீங்கள் அவர்களை மதிக்கிறீர்கள் என பொருள் இல்லை. பிரதமர் மோடி காந்தியையும் மேற்கோள்காட்டி வருகிறார். ஆனால் கோட்சே காந்தியை படுகொலை செய்தார். எனவே ஆதாயம் தேடுவதற்காக யாரையாவது மேற்கோள் காட்டுவது அவர்களுக்கு மரியாதை செய்வதாகாது. மரியாதை மனதில் இருந்து வரவேண்டும். வாயில் இருந்து வருவது மரியாதை இல்லை."
கலாசாரம், பொருளாதாரம் போன்றவை அடுத்த 10 ஆண்டுகளில் எப்படி இருக்கும் என கருதுகிறீர்கள்?
"பிரதமர், ஆர்எஸ்எஸ், பாஜக நாட்டின் அடித்தளத்தை பலவீனப்படுத்துகிறார்கள் என கருதுகிறேன். விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், இளைஞர்கள் மீனவர்கள் என மக்கள்தான் நாட்டின் அடித்தளம். ஆனால் பிரதமரை பொருத்தவரை 5 அல்லது 6 பெரிய மனிதர்கள்தான் முக்கியம். இவர்களுக்கு சாதகமாக செயல்படுவதற்கு மட்டுமே பிரதமர் முழு முயற்சி செய்கிறார்."
கலாசாரம், பொருளாதாரம் என அனைத்தையும் பாஜக அழிப்பதாக கருதுகிறீர்கள் அப்படியானால் மக்கள் அவர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்?
"அவர்கள் இந்தியாவில் அடிப்படை அமைப்புகள் அனைத்தையும் கைப்பற்றியுள்ளார்கள். அவர்கள் ஊடகத்தை முழுமையாக கைப்பற்றியுள்ளனர். இப்போது நிதியையும் முழுமையாக அவர்கள் கைப்பற்றியுள்ளனர். ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்கட்சி கட்டமைப்பின் மூலமே இயங்குகின்றன. எனது கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல எனக்கு நீதிமன்றங்கள், சுதந்திரமான ஊடகங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை. ஆனால் அவர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். இந்தியா இன்று சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது."
பாஜக அனைத்தையும் அழித்ததாக கூறுகிறீர்கள். ஆனால் நிறைய மாநிலங்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனவே?
"ஊடகம், சட்டத்துறை நாட்டில் நடைபெறும் விவாதத்தின் மொத்த கட்டுப்பாட்டை உங்களிடம் ஒப்படைத்தால் உங்களது கருத்து மக்களிடம் சுலபமாக சென்றுசேரும். சமூக வலைதளங்கள் சட்டத்துறைக்கு மாற்று அல்ல. சமூக வலைதளங்கள் தொலைக்காட்சிக்கு மாற்று அல்ல. சமூக வலைதளங்கள் நம்பிக்கை அளிப்பது உண்மைதான். ஆனால் அவர்கள் இந்தியாவின் ஆன்மாவை கைப்பற்றுகின்றனர்."