இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் இருந்து அந்நாட்டு அதிகாரிகளை இந்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், கனடா அரசும் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் கனடாவை விட்டு வெளியேறும்படி 6 இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார்.
அதன்பிறகு, இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், நிஜ்ஜார் கொலை வழக்கில், கனடாவின் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றஞ்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று முற்றிலும் மறுத்துள்ள இந்திய அரசு, இந்திய அதிகாரிகளை ஆதாரமின்றி அவமதிப்பதாக சாடியுள்ளது. கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை கட்டுப்படுத்தத் தவறியதை, அந்நாட்டு அரசு நியாயப்படுத்த முயல்வதாகவும் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில் ஜஸ்டின் ட்ருடோ இந்திய தூதரக அதிகாரிகள் மீது சந்தேகம் உண்டாக்கும் வகையிலான குற்றச்சாட்டை முன் வைத்திருப்பதால், இந்திய அரசு சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்ட தூதரக அதிகாரிகளை இந்தியாவுக்கு திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளது. இவர்களது பாதுகாப்புக்கு ஜஸ்டின் ட்ருடோ அரசின் நடவடிக்கைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என வெளியுறவுதுறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
சமீபத்தில் சஞ்சய் குமார் வர்மா படத்தை துப்பாக்கியால் சீக்கியர்கள் சுடுவது போன்ற சித்திரங்களை இணையதளத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர். மேலும் இந்திய தூதரகம் மீது தாக்குதல் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் என காலிஸ்தான் ஆதரவாளர்களின் சட்டவிரோத நடவடிக்கை தொடர கனடா அரசு அனுமதித்துள்ளது என்பது இந்திய அரசின் குற்றச்சாட்டு.
இந்தநிலையில், இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் இருந்து அந்நாட்டு அதிகாரிகளை இந்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், கனடா அரசும் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.