தமிழகம் எதிர்பார்த்து காத்திருந்த வடகிழக்கு பருவமழை தீவிரமடையாததற்கு என்ன காரணம் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் நமக்கு விளக்குகிறார். அதன் விவரம், இங்கே:
“இயல்பாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி துவங்கும். இந்தாண்டு இயல்பிற்கு முன்னதாக அக்டோபர் 15ம் தேதியே துவங்கியது. துவக்கத்திலேயே காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி நகரும் என பகீர் கிளப்பிய நிலையில், சென்னையில் ஒரே ஒரு நாள் கனமழை பெய்ததுடன் அக்டோபர் மழை ஒய்ந்தது. பிறகு அக்டோபரில் வெயிலும், உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும் காணப்பட்டது.
நவம்பர் 10ம் தேதி தென்மேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு நாள் தாமதமாக நவம்பர் 11ம் தேதி வடதமிழகம், தெற்கு ஆந்திராவை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் தாழ்வு பகுதி உருவானது. இடமாறி உருவான இந்த தாழ்வு பகுதியால் இம்முறையும் மழை தீவிரமடையவில்லை.
இவை ஒருபுறம் இருக்க இன்று வரை தமிழகத்தில் இயல்பாக பதிவாக வேண்டிய 27 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இயல்பாக அட்லாண்டிக் பெருங்ககடலில் செப்டம்பர் மாதத்தில் அடுத்தடுத்து சூறாவளி புயல்கள் உருவாகும், ஆனால் இந்தாண்டு செப்டம்பரில் பெரிதாக சூறாவளி புயல்கள் (Hurricane) உருவாகவில்லை. மாறாக இந்த அக்டோபர் மாதத்தில்
1. Joy (TS),
2. Kirk (Cat 4),
3. Leslie (Cat 2),
4. Milton (Cat 5),
5. Nadine (Cat 1),
6. Oscar (Cat 1)
என அடுத்தடுத்து 6 சூறாவளி புயல்கள் உருவாகின. நவம்பர் முதல் வாரத்தில் உருவான Patty என்ற புயலுடன் அட்லாண்டிக் பெருங்கடல் அமைதியடைந்துள்ளது.
இதில் மில்டன் சூறாவளி புயல் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் தாக்கத்தை அமெரிக்க மாகாணத்தில் ஏற்படுத்தியது. வரும் வாரங்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிதாக புயல் உருவாக சாதகமான சூழல் இல்லை.
மறுபுறம் செப்டம்பர், அக்டோபரில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் தாமதமாக தீவிர புயல்கள் (Typhoons) உருவாகி வருகின்றன. அந்தவகையில் கடந்த ஒரு மாதத்தில் மேற்கு பசிபிக் பெருங்கடலில்
1. Jebi (Cat 3),
2. Barijat (TS),
3. Trami (TS),
4. Kong-rey (Cat -4),
5. Kra-thon (Cat -4),
6. MAN -YI (Cat -4)
என அடுத்தடுத்து புயல்கள் உருவாகி உள்ளன. இவற்றில் Kong-rey மற்றும் தற்போது நிலவக்கூடிய Man-Yi ஆகியவை, சூப்பர் புயல்களாக தீவிரமடைந்துள்ளன. இந்த காலக்கட்டத்தில் இந்திய பெருங்கடலில் டானா (DANA) என்ற ஒரே ஒரு புயல்தான் உருவானது. அதுவும் அக்டோபர் இறுதியில்தான் உருவானது.
இந்திய பெருங்கடலில் வலுவான சலனங்கள் உருவாகாததற்கும், பருவமழை தீவிரமடையாததற்கும் முக்கிய காரணியாக இந்த அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடலில் தாமதமான தீவிர சூறவாளி புயல்களே பார்க்கப்படுகின்றன.
நவம்பர் 20ம் தேதிக்கு பின்பு அட்லாண்டிக், பசிபிக் என அனைத்து கடல் பகுதிகளும் அமைதி அடைந்து கடல்சார்ந்த அலைவுகளான மேடன் ஜூலியன் அலைவும், ராஸ்பி, கெல்வின் என்ற அலைவுகள் இந்திய பெருங்கடலுக்கு சாதகமாக அமையும். அப்போது இந்திய பெருங்கடலும் நவம்பர் நான்காவது வாரம் முதல் டிசம்பர் வரை தாதமதமாக அடுத்தடுத்த புயல்சின்னங்களை வங்ககடலில் உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வடகிழக்கு பருவமழையும் நவம்பர் 25ம் தேதி முதல் தமிழகத்தில் தீவிரமடைய உள்ளது.
குறிப்பாக நவம் 23ல் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக மாறி நவம்பர் இறுதி வாரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் நல்ல மழையை கொடுக்கும். அந்த வகையில் வானிலை காரணிகள் சாதகமாகி வருகிறது” என்றார்.