அக்டோபர், நவம்பர் மாதங்களில் பருவமழையானது எதிர்பார்த்தது போல் இல்லாமல் பொய்த்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடங்க உள்ள மூன்றாம் சுற்று பருவமழைக்குறித்து சுயாதீன வானிலை ஆய்வாளர், டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அதை விரிவாக அறியலாம்:
“மூன்றாம் சுற்று வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நவம் 23ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நீடிக்கும். நவம் 23, 24, 25 தேதிகளில் தீவிரமடையாமல் விட்டு விட்டு / ஒதுக்கி ஒதுக்கி மழை பெய்யும். கடலோரத்தின் ஒருசில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு அதிகம். நவம் 26, 27, 28 ஆகிய நாட்களில் பருவமழை தீவிரமடைந்து நவம் 30ம் தேதி வரை மழையை கொடுக்கும்.
தெற்கு வங்கக்கடலில் நவம் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, நவம் 26ம் தேதி இரவு புயல் சின்னமாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த புயல் சின்னம் வடகடலோரம், டெல்டா மாவட்டங்களை நோக்கி நகரும். குறிப்பாக புதுச்சேரிக்கும் - கோடியக்கரை (நாகப்பட்டிணம்) இடையே நவம் 27 / 28 தேதிகளில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதன் காரணமாக நவம் 23ம் தேதி முதல் சென்னை முதல் நாகை வரையிலான வடகடலோர மாவட்டங்களில் மழை துவங்கி, நவம் 25ம் தேதி இரவு முதல் முன்றாம் சுற்று மழை தீவிரமடைந்து மழையை கொடுக்க இருக்கிறது. கடல் சார்ந்த அலைவுகளும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை, வளிமண்டல அமைப்புகள் என வானிலை காரணிகள் மிக சாதகமாக இருப்பதால் மூன்றாம் சுற்றில் வட கடலோரம், டெல்டா மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்து நல்ல மழையை தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதே போல் உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களை பொறுத்தவரை சலனம் கரையை கடந்து அரபிக்கடல் நோக்கி நகரும் போது மழை எதிர்ப்பார்க்கலாம்.
இப்புயல் சின்னம் காற்று பாதிப்பை தராது. அதேநேரம் வட கடலோரம் / டெல்டாவில் குறிப்பாக நாகப்பட்டிணம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நல்ல மழையை கொடுக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.
வட கடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் வடிகால்களை சரிசெய்தும், குறுகிய நேரத்தில் அதித மழை பெய்தால் வயல்களில் தண்ணீர் வடியும் அளவிற்கு வடிகால்களை ஏதுவான சூழலுக்கு புணரமைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் அன்று (நவம் 24ம் தேதி) இச்சலனம் இன்னும் தீவிரமாக இருக்கும் என்பதால் அன்று கூடுதல் கவனம் தேவை” என்று கூறினார் ஹேமச்சந்திரன்.