40க்கும் மேற்பட்ட ஒன்றியங்களில் தலைவர் பதவியை சுயேச்சைகளே தீர்மானிப்பதால் அவர்களது ஆதரவைப் பெற அதிமுக, திமுக இடையே போட்டி நிலவுகிறது.
314 ஒன்றியங்களுக்கான உறுப்பினர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அவற்றுக்கான தலைவர்களை தேர்வு செய்ய, வரும் வாரம் மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சுமார் 40க்கும் அதிகமான ஒன்றியங்களில் தலைவர் பதவி எந்த கட்சிக்கு என்பதை முடிவுசெய்யும் இடத்தில் சுயேச்சைகள் உள்ளனர்.
எனவே தமிழகம் முழுவதும் சுயேச்சை ஒன்றிய உறுப்பினர்களின் ஆதரவை பெற பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் முனைப்பு காட்டுகின்றன. உதாரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு ஒன்றியங்களில் சுயேச்சைகள் ஆதரவு அளித்தால் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, அரிமளம், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை ஆகிய நான்கு ஒன்றியங்களிலும் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் சுயேச்சைகளின் ஆதரவை திரட்டுவதில் இரு பிரதான கட்சிகளும் வேகம் காட்டி வருகின்றன.