விழிப்புணர்வு ஏற்படுத்த இராதாபுரம் தொகுதியில் ஆயிரம் 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் சுயேட்சை வேட்பாளர் ஒருவர்.
நெல்லை மாவட்டம் இராதாபுரம் சட்ட மன்றத் தேர்தலையொட்டி திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி கட்சியினர், மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று திசையன்விளையைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ராஜீவ் வேட்பு மனுவினை தாக்கல் செய்ய வந்தார். அப்போது, அவர் தேர்தல் காப்பு தொகையான ரூபாய் பத்தாயிரத்திற்கு ஆயிரம் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
இந்த 10 ரூபாய் நாணயத்தை 4 தேர்தல் அலுவலர்கள் சுமார் 1 மணி நேரம் எண்ணி முடித்தனர். பின்பு அவரது மனுவினை தேர்தல் அதிகாரி பெற்று கொண்டார். இதுகுறித்து வேட்பாளர் ராஜீவ் கூறுகையில்,
பொதுமக்கள் மத்தியில் 10 ரூபாய் நாணயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும பல இடங்களில் சில்லரை வியாபாரிகளும் விற்பனையாளர்களும் வாங்குவதற்கு பலர் தயங்குவதால் 10 ரூபாய் நாணயம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பத்தாயிரத்திற்காக ஆயிரம் 10 ரூபாய் நாணயத்தை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இவர், ஏற்கனவே 2016 சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நான்குநேரி இடைத்தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.