நீலகிரி மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், பழங்குடியின மக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பாரம்பரிய நடனமாடி உற்சாகப்படுத்தினார்.
உதகை அரசுக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் நடைபெற்ற மண்ணின் மைந்தர்களான படுகர், தோடர், கோத்தர், குரும்பர், இருளர், உள்ளிட்ட பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தை பார்வையிட்டார் ஆட்சியர், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பழங்குடியின மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடினார்.
இதையடுத்து பணியின்போது சிறந்து விளங்கிய காவலர்கள் மற்றும் கோவிட் காலத்தில் சிறந்த சேவைபுரிந்த தன்னார்வ அமைப்புகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.