பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பராமரிப்பு மையங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அந்தந்த மாவட்ட, மாநகர நிர்வாகங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 562 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தினசரி 100 க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தொற்று உறுதியாவோர் விகிதம் 1.45% லிருந்து 1.75 % ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மாவட்டத்திற்கு ஒரு கோவிட் பராமரிப்பு மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 4000 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள புளியந்தோப்பு பராமரிப்பு மையம் மீண்டும் பயன்பாட்டிற்கு வருகிறது. வைரஸ் தொற்று குறைந்த நிலையில், அக்டோபர் இறுதியில் கொரோனா பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டன.