மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதாலும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால் எந்த நேரத்திலும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவிரி கரையோர பகுதிகளான தங்கமாபுரிபட்டினம், நேரு நகர், பெரியார் நகர், உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் ஆய்வாளர் நீலா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து நகராட்சி வாகனத்தில் ஒலிபெருக்கி மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதால் 24 மணி நேரமும் வருவாய்த் துறையினர் காவல் துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.