கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரித்து வருவதால் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென இதய சிகிச்சை நிபுணர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவையில் இந்திய இரதய அறுவை சிகிச்சை சங்கத்தின் 69வது வருடாந்திர கருத்தரங்கம் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார். இந்த மருத்துவ கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில், இதய அறுவை சிகிச்சையில் உள்ள புதுமைகளை எடுத்துரைக்கவும், இதய அறுவை சிகிச்சை குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் தளமாகவும் இந்த கருத்தரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கின் முக்கிய உரையை உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் வழங்கினார். பெருந்தொற்றை நாம் கையாண்டதும், அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களும் என்ற தலைப்பில் அவர் பேசினார்.
இந்த விழாவில் பேசிய அவர், நாளை 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளும் போட்டி போட்டுக் கொண்டு இருதய மாற்று அறுவை சிகிச்சையில் பங்களிப்பு அளித்து வருகின்றன. 2008-க்கு பிறகு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இருதய மாற்று அறுவை சிகிச்சை உட்பட பல மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் மிக சிறப்பாக பங்களித்து வரும் ஜப்பான் சென்று, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் உட்பட உயர் அதிகாரிகளுடன் உதவியுடன் நேரடியாக அந்த சிகிச்சையை முறைகளையும் பார்த்து வந்துள்ளோம்.
அந்நாட்டில் செயல்படுத்தி வரும் Health walking என்ற திட்டம் மாரடைப்பை குறைக்க அவசியம் என்ற அடிப்படையில், தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் Health walking திட்டத்தை கொண்டு வர முதல்வரிடம் கோரிக்கை வைத்து செயல்படுத்த உள்ளோம். கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரித்து வருவதால் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென இதய சிகிச்சை நிபுணர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்த அவர், இளைஞர்களிடையே உடற்பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாள்தோறும் நான் ஓடி வருகிறேன் என்றார்.