திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவிலில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் 31 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தீத்தாம்பாளையம், பரப்புமேடு பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா உள்ளாட்சி மேம்பாட்டுப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜவஹர் என்பவரது வீட்டிலஉரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் இருப்பதாக வருமானவரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வெள்ளகோயிலில் உள்ள ஜவஹரின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் வீட்டின் உள்பக்க அறையில் வைத்திருந்த 31 லட்சத்து 74 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் இந்தப் பணம் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமானது என தெரியவந்தது. வெள்ளகோவில் பகுதிகளில் கோயில் திருப்பணிகள் செய்வதற்கு இந்த பணத்தை ஆற்றல் அசோக்குமார் கொடுத்து வைத்திருந்ததாக ஜவஹர் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த பணம் கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைக்கப்பட்ட பணம் எனவும் தேர்தலுக்கு தொடர்பு இல்லை என கடிதம் அளித்திருப்பதாகவும் ஜவஹர்தெரிவித்தார்.