திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனை செய்யும் இரண்டு நிறுவனங்கள் 90 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் தெரியவந்துள்ளது.
பழனி மலை அடிவாரப்பகுதியில் உள்ள சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் பஞ்சாமிர்த நிறுவனங்கள் வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான பஞ்சாமிர்த கடைகள், குடோன்கள், உரிமையாளர்களின் வீடு, உறவினர்களின் வீடு என 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
சிந்தனாதன் பஞ்சாமிர்த கடையில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாயுக்கும், திருவிழா காலங்களில் 50 லட்சம் ரூபாய் அளவிற்கும் பஞ்சாமிர்தம் விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் சில ஆண்டுகளாக இந்நிறுவனம் வருவாயை குறைத்து கணக்கு காட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கடையின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என 100 பேரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனையில் இரு பஞ்சாமிர்த நிறுவனங்களும் 90 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், கணக்கில் வராத 22 கோடி ரூபாய் மதிப்பிலான 73 கிலோ தங்கநகைகள், 3 கோடி ரூபாய் ரொக்கம், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிமாவட்டங்களில் உள்ள சொத்து மதிப்புகளும் கணக்கிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அடுத்ததாக சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் பஞ்சாமிர்த நிறுவனத்தின் உரிமையாளர்கள், அவர்களின் மகன்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்