சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.300 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், கடன் அளித்தவர் ஆகியோர் தொடர்புடைய 38 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. விநியோகஸ்தருக்கு சொந்தமான அசல் ஆவணங்கள் அவரது நண்பர் வீட்டின் மறைவிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. சொத்து ஆவணங்கள், அடமான பத்திரங்கள், காசோலைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிகில் படத்திற்கு நிதி அளித்த பைனான்சியரிடம் இருந்து ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனைக்குள்ளான விநியோகஸ்தர், கட்டுமானத் தொழிலதிபரும் ஆவார். மதுரை, சென்னையில் உள்ள 38 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.300 கோடி வரை கணக்கில் காட்டாத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘பிகில்’ படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு அளிக்கப்பட்ட சம்பளத்திற்கான ரசீதுகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்மூலம் ஏதேனும் அசையா சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு தொடர்கிறது. இன்னும் சில இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை தொடர்ச்சியாக சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.