வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள வி.வி.மினரல்ஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து வைகுண்டராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐந்து நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வைகுண்டராஜனிடம் கேள்விகள் கேட்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் 30 வங்கிக் கணக்குகள் மற்றும் 24 வங்கி லாக்கர்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது.
வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 98 இடங்களில் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தப்பட்டது. ஐந்தாவது நாளான இன்று 10 இடங்களில் மட்டும் சோதனை தொடர்வதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோதமாக தாது மணலில் இருந்து கனிமங்களை பிரித்தெடுத்து விற்பனை செய்தது, அதன் மூலம் கிடைத்த வருவாயை கணக்கில் காட்டாமல் மறைத்தது உள்ளிட்ட புகார்களின் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.