பட்டம் மற்றும் மாஞ்சா நூல் விற்பனை... கைதான திமுக பிரமுகரின் மகன் உட்பட 18 நபர்கள்!

ஆன்லைன் மூலமாக ஜெய்ப்பூரில் இருந்து பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் வாங்கி சென்னையில் அதிக விலைக்கு விற்பனை தொடர்பாக திமுக பிரமுகரின் மகன் உட்பட 18 நபர்கள் கைது.
பட்டம் மற்றும் மாஞ்சா நூல் விற்பனை
பட்டம் மற்றும் மாஞ்சா நூல் விற்பனைமுகநூல்
Published on

செய்தியாளர் : அன்பரசன்

சென்னையில், மாஞ்சா பட்டம் விடுவதால் பலரின் உடல் உறுப்பு அறுக்கப்பட்டு பெறும் காயங்கள் ஏற்படுவது முதல் உயிரிழப்பு வரையிலான பல அசம்பாவிதங்கள் நடந்து இருக்கிறது.

இதனையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டு மாஞ்சா நூலுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தடையை மீறி மாஞ்சா நூலைப் பயன்படுத்துவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஒவ்வொரு 60 நாட்களுக்கு ஒருமுறை மாஞ்சா விடுதல் தடை செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை அறிவுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக மாஞ்சா பட்டம் கலாசரம் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மாஞ்சா கலாச்சாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.

கடந்த 17ம் தேதி வியாசர்பாடியைச் சேர்ந்த கறிக்கடைகாரர் ஜிலானி பாஷா தனது இரண்டரை வயது குழந்தையுடன் வியாசர்பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது அடுத்தடுத்து இருவரது கழுத்தையும் மாஞ்சாக் கயிறு அறுத்தது. இந்த சம்பவம் சென்னையை உலுக்கிய நிலையில் வடசென்னையில் பட்டம் விடுதலை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அந்த வகையில் ஒட்டேரி, வியாசர்பாடி, புளியந்தோப்பு மற்றும் பேசின்பிரிட்ஜ் போலீசார் தொடர்ச்சியாக பட்டம் மற்றும் மாஞ்சா நூல் விற்பனை செய்யும் வீடுகளில் சோதனை செய்து திமுக பிரமுகரின் மகன் உட்பட 18 நபர்களை கைது செய்துள்ளனர்.

அதில் இன்று மட்டும் குருகோகுல், மகேஷ், ராஜசேகர், ஹரிஹரன், மற்றும் மற்றொரு ஹரிஹரன், ராஜேஷ், ஜெயபால் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள குரு கோகுல் என்பவரின் தந்தை கங்காதரன் திமுக சென்னை தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளராக இருந்து வருவதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ்நாட்டில் பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் தடை செய்யப்பட்டு இருப்பதால், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் குழு மூலமாக ஜெய்ப்பூரில் இருந்து பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் வாங்கி வந்து சென்னையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.

மேலும், திமுக பிரமுகரின் மகன் குரு கோகுல் கே.கே நகரில் உள்ள தனது வீட்டிலேயே மாஞ்சா நூல் செய்து விற்பனை செய்து வருவதும், இவர் பட்டம் தொடர்பான போட்டிகள் நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, வாட்ஸ் அப் குழுவில் பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் கேட்டால் இவர்களுக்கு சப்ளை செய்யக்கூடிய பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக காற்றாடி பிரியர்கள் என்ற whatsapp குழுவையும் தொடங்கிப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

பட்டம் மற்றும் மாஞ்சா நூல் விற்பனை
கடலூர்: விபத்தை ஏற்படுத்திய விளம்பரப் பதாகை

கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் குடோன் மற்றும் வீடுகளை தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்ட போது 500க்கும் மேற்பட்ட காற்றாடிகள், 200க்கும் மேற்பட்ட லோட்டாய்கள், மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படுத்தப்படும் மிஷின்கள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் தொடர்ந்து இவர்களிடம் மாஞ்சா பட்டம் வாங்கி பறக்க விட்டு வருவதால் அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும், இன்ஸ்டாகிராம் மூலமாக விற்பனை செய்யும் FB கைட்ஸ் என்ற நபரை கைது செய்யும் பணிகளில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டம் மற்றும் மாஞ்சா நூல் விற்பனை
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கு - சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு

மாஞ்சா நூல் மற்றும் பட்டம் விடுபவர்களை தொடர்ச்சியாக கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்டுள்ள பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com