`புத்தாண்டு இரவில் மறந்தும் இதையெல்லாம் செய்துடாதீங்க!’- டிஜிபி சைலேந்திரபாபு கண்டிஷன்!

`புத்தாண்டு இரவில் மறந்தும் இதையெல்லாம் செய்துடாதீங்க!’- டிஜிபி சைலேந்திரபாபு கண்டிஷன்!
`புத்தாண்டு இரவில் மறந்தும் இதையெல்லாம் செய்துடாதீங்க!’- டிஜிபி சைலேந்திரபாபு கண்டிஷன்!
Published on

அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத வகையில், விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் 2023 புத்தாண்டு கொண்டாடங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாடங்களின் போது, குற்ற சம்பவங்களோ அசம்பாவிதங்களே நிகழாமல் தடுக்கும் வண்ணம் தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “டிசம்பர் 31 ஆம் தேதி மாலை முதல் சுமார் 90 ஆயிரம் காவல் துறையினரும் 10 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனை நடைபெறும். எனவே, நள்ளிரவு மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. முதல்நாள் இரவும் புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடலில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது.

மது அருந்தியவர்கள் வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர். அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்களை தவிர்க்கவும் உயிர் சேதத்தை குறைக்கவும் மட்டுமே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இரவு நேரங்களில் மோட்டார் வாகனத்தில் நீண்ட தூரம் பயணிப்பவர்கள், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தை தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்காக இரவு முழுவதும் நெடுஞ்சாலை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன, வழிபாட்டுத் தலங்களுக்கு காவல்துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள்.

வெளியூர்களுக்கு செல்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் பூட்டிய வீட்டருகில் காவல் ரோந்து ஏற்பாடு செய்யப்படும், இதனால் பூட்டிய வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் தவிர்க்கப்படும். கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் பற்றிய தகவலை காவல்துறைக்கு 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

அவசர உதவி தேவைப்படுபவர்கள் 'காவல் உதவி' என்ற அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்காக 'காவல் உதவி' செயலியை இன்றே பதிவிறக்கம் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம். அசம்பாவிதம் இல்லாத விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளோம்” என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com