உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் அடிப்படையில் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இத்தருணத்தில், சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டும், அவை செயல்படாமல் இருப்பது தங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக தாய்மார்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எப்போதும் கூட்டமாகக் காணப்படும் பேருந்து நிலையங்களில், தங்கள் குழந்தைகளுக்கு தாய்மார்கள் சிரமமின்றி தனிமையில் பாலூட்டும் வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு அனைத்து மாநகராட்சி, நகராட்சி பேருந்து நிலையங்களிலும் தனி அறைகள் அமைக்கப்பட்டன. அச்சமயத்தில் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
ஆனால், தற்போது பெரும்பாலான பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் பயன்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளன. சென்னை மாநகர பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்ட 40 அறைகளும் பூட்டியபடியே காட்சியளிக்கும் நிலையில், அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.
பச்சிளங்குழந்தைகளுக்கு பாலூட்ட பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்ட தனி அறைகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவருவது மட்டுமல்லாமல், அனைத்து பொது இடங்களிலும் அவ்வாறான அறைகள் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது
பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது குறித்து கேட்டதற்கு, மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர். சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் நிலையில், இந்தப் பிரச்னையிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.