பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தமிழ் புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில், பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மகாகவி பாரதியார் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது அவரின் முண்டாசு தான். வெள்ளை நிறை தலைப்பாகையும், முறுக்கு மீசையும், கருநிற உடையும், வீரம் பொங்கும் கண்களும் பாரதியாரின் உருவத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன. இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தமிழ் புத்தகத்தின் அட்டைப் புக்கதத்தில், பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக எல்லா இடங்களிலும் பாரதியாரின் தலைப்பாகை வெள்ளை நிறத்தில் இருக்கும் நிலையில், காவியுடன் பாரதியாரின் தலைப்பாகை இருப்பது ஏன் என பலரையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது.
இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, “ நான் நீண்ட காலமாக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். ஆனால் பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். வழக்கமாக தலைப்பாகை வெள்ளை நிறத்தில்தான் இருக்கும்” என தெரிவித்தார். ‘பாரதியாரை வெள்ளை நிற தலைப்பாகையோடு யாராவது பார்த்திருக்கிறீர்களா..?' என திமுக எம்எல்ஏவும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்கள் மத்தியில் பாரதியாரின் தோற்றத்தை மாற்றிக் காட்டுவதற்கான முயற்சி இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவரான வளர்மதி இதுகுறித்து கூறும்போது, “ மாநில அரசால் வழங்கப்பட்ட பாடப்புத்தகம் இது. கல்வியை பொறுத்தவரை அதில் அரசியல் மற்றும் மதம் போன்ற கேள்விக்கே இடமில்லை. இது தெரியாமல் நடந்திருக்கும் ஒரு தவறாகத் தான் இருக்க முடியும். அப்படியாக இருந்தால் அது ஆராயப்பட்டு சரிசெய்யப்படும்” என தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த பாடப்புத்தகத்தை வடிவமைத்த டிசைனர் கூறுகையில், பாரதியாரின் தலைப்பாகை நிறம் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் விதமாகவே உருவாக்கியதாகவும், அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.