தேனி மாவட்டம் அணைக்கரைபட்டி பகுதியை பூர்வீகமாக கொண்டவர் டி.ஐ.ஜி. விஜயகுமார். ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பு குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். அப்போது பணியில் இருக்கும்போதே ஐ.பி.எஸ். தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் சென்னையில் அண்ணா நகர் துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்தார். அதனையடுத்து டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டி.ஐ.ஜி-யாக பொறுப்பேற்றார். கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக கோவை சரக்கத்தில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த விஜயகுமார் மன அழுத்தம் காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் எஸ்.பி. ஆக இருந்தபோது ஐ.டி. ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு விசாரணை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. காவல்துறை வட்டாரத்தில் பேசப்பட்டது.
அதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை தொடர்பாக 40 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்தார்.
மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு சி பி சி ஐ டி, எஸ் பி ஆக சென்னையில் பணியாற்றியபோது டி என் பி எஸ் சி தேர்வு முறைகேடு வழக்கு புலனாய்வை திறைமையாக கையாண்டுள்ளார். 2021 பாலியல் தொல்லை வழக்கில் சாமியார் சிவசங்கர் பாபாவை டெல்லியில் சென்று கைது செய்தார் விஜயகுமார்.
காவல்துறை பணியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை திறமையாக கையாளும் விஜயகுமார் தமிழக காவல்துறைக்கு ஒரு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறார்.