வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும், ஆதார் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடியில் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவை அடையாளச் சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பில்,”புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸ் கணக்கு புத்தகங்கள், நூறு நாள் வேலைத்திட்ட பணி அட்டை ஆகியவற்றை பயன்படுத்தியும் வாக்களிக்கலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டைகளையும் அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம்.
மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டையும் அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.
பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், எம்எல்ஏ, எம்பிக்களுக்கான அலுவலக அடையாள அட்டையைப் பயன்படுத்தியும் வாக்குகளை செலுத்தலாம். அதே நேரத்தில், பூத் சிலிப்பை அடையாளச் சான்றாக பயன்படுத்தி வாக்களிக்க முடியாது" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.